மேதாவி முனிவரின் வளர்ப்பு மகளான வஞ்ஜுளவல்லியை பகவான் ஸ்ரீநிவாஸனாக திருமணக் கோலத்தில் எழுந்தருளி மணந்துக் கொண்ட ஸ்தலம். அதனால் இத்தலத்தில் தாயாருக்கே முதலிடம். வீதிஉலாவின்போதும் தாயாரே முதலில் எழுந்தருளுவார். அதன்பொருட்டு இந்த ஸ்தலம் 'நாச்சியார் கோயில்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் திருநறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாஸுதேவன் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் வஞ்ஜுளவல்லி (நம்பிக்கை நாச்சியார்) என்று வணங்கப்படுகின்றார். பெருமாளுக்கு வலதுபுறத்தில் திருமணக் கோலத்தில் நின்ற நிலையில் தரிசனம் தருகின்றார். மேதாவி முனிவர், பிரம்மா ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயிலில் கல் கருடனுக்கு தனி சந்நதி உள்ளது. கருடஸேவையின்போது பெருமாள் கல் கருடன் மீது எழுந்தருளுவார். சந்நிதியில் 4 பேர் சேர்ந்து சுமப்பார்கள், தூரம் செல்லச் செல்ல பாரம் கூடி முடிவில் கோயில் வாசலில் 64 பேர் ஸ்ரீபாதம் தாங்குவார்கள். மீண்டும் சந்நிதிக்கு எழுந்தருளும்போது கனம் குறைந்து, இறுதியில் 4 பேர் சுமக்கும் அளவுக்கு குறைந்துவிடும்.
இந்தத் திருக்கோயிலில் 108 திவ்யதேசங்களில் ஸேவை சாதிக்கும் பெருமாளின் விக்கிரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இவற்றை ஒருசேர தரிசனம் செய்யலாம்.
திருமங்கையாழ்வார் 110 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|